மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி நந்தினி விடுவிப்பு

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி நந்தினி விடுவிப்பு
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி நந்தினி விடுவிப்பு

தமிழகம் வந்த பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, தனது தந்தை ஆனந்தனுடன் கைது செய்யப்பட்டு அடுத்த 4மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 9-ஆம் தேதி, ஈ.வி.எம். கருவியை தடைசெய்துவிட்டு வாக்குச்சீட்டில் நேர்மையாக தேர்தல் நடத்த மோடி அஞ்சுவது ஏன் எனக் கேள்வி கேட்கும் போராட்டம் நடத்தவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் மதுரையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையிலிருந்து இருச்சக்கர வாகன பிரச்சார பயணத்தையும் நடத்தினார். 

இந்தச் சூழலில் திருப்பூரில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். பின் அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் திருப்பூர் சென்றார். அப்போது கோவை சிட்ரா சிக்னல் அருகே கோவை விமான நிலையம் நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட தனது தந்தை ஆனந்தனுடன் வந்திருந்த நந்தினியை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்து பீளமேடு காவல் நிலையம் அழைத்து சென்றனர். 

மேலும் பீளமேடு காவல்துறையினர் அவர்கள் மீது 151 பிரிவான பொதுமக்கள் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பிரதமர் மோடி மாலை கோவை விமான நிலையத்திலிருந்து கர்நாடக புறப்பட்டவுடன் இருவரையும் விடுவித்தனர். இதனிடையே திருப்பூரில் பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com