\
Latha Rajinikanth launched a new movement called makkal medai
லதா ரஜினி, அண்ணாமலைஎக்ஸ் தளம்

முதல் நாளே அண்ணாமலைக்கு ஷாக்? களமிறங்கிய லதா ரஜினிகாந்த்.. ஒரேநாளில் உருவெடுத்த இயக்கங்கள்!

நீண்டகாலம் பாஜகவில் இருந்த அண்ணாமலை, இன்று அக்கட்சியிலிருந்து விலகி, தனி இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
Published on

சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாற்றத்தைச் சந்தித்துவரும் தமிழ்நாட்டில், புதிய கட்சிகள் பிறப்பெடுத்துள்ளன. பாஜகவில் இருந்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி புதுக் கட்சி ஆரம்பித்த நிலையில், தற்போது லதா ரஜினிகாந்தும் புதிய இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு மாற்றத்தை விதைத்திருக்கிறது என்றே சொல்லலாம். நடிகர் விஜய், கட்சி ஆரம்பித்த இரண்டே வருடங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளார். இதனால், 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோலோச்சி வந்த திராவிடக் கட்சிகள் இன்று பெருத்த தோல்வியைச் சந்தித்துள்ளன. மேலும் இது, திமுக மற்றும் அதிமுக என இரு பெரும் கட்சிகளுக்குப் பெரிய பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது. இவைகள் இரண்டும் அந்த தோல்வியிலிருந்து எழுந்திருக்க முய்ற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தமிழத்தில் அடுத்தடுத்து புதிய மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. விஜயைப்போலவே ஒருசிலர், தனிக்கட்சி இயங்கும் கனவில் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், நீண்டகாலம் பாஜகவில் இருந்த அண்ணாமலை, இன்று அக்கட்சியிலிருந்து விலகி, தனி இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

‘புதிய பாதை, புதிய இயக்கம், புதிய பரிமாணத்தோடு, பார்வையோடு ஆரம்பிக்க வேண்டும் என்பது என் ஆசை. தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று அறிவித்த அண்ணாமலை, ’இது நம்ம இயக்கம்’ (we the leaders) என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார். அவர் ஆரம்பித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, லட்சக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். முதல் ஒரு மணிநேரத்தில் 10 ஆயிரம் பேர் இணைந்திருந்த நிலையில், தற்போது அதில் 5 லட்சத்திற்கும் மேலானோர் இணைந்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தும் ஒரு புதிய இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் ஒரு புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ள அவர், இதில் இணைய விரும்புவோர் 7550080515 என்ற அலைபேசி எண் அல்லது makkalmedaitain12@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

இந்த இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த், ‘மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோக்கலாம்; ஒன்றாக இணைந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து பல நல்ல காரியங்களைச் செய்வோம்’ என அவர் தெரிவித்துள்ளார். ஒரு சாமானிய மனிதர் முதல் சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் யோசனைகளையும், மக்கள் சக்தியையும் ஒருங்கிணைப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். இந்த இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும், அந்தந்தத் தொகுதிகளின் முன்னேற்றத்திற்காகவும் உழைக்கக்கூடிய புதிய உள்ளூர் தலைவர்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக கூறிவிட்டு, பின்னர் உடல்நலக் காரணங்களால் அதிலிருந்து பின்வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com