அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் கேரளா, தெற்கு உள் கர்நாடகா, ஆந்திராவின் ராயலசீமா பகுதிகளிலும் தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் தெரிவித்தது. தீபாவளிக்கு முன்பாக கூட சில இடங்களில் மழை பெய்தது. ஆனால், பெரிய அளவில் மழை இதுவரை பெய்யவில்லை. தீபாவளி மற்றும் அதற்கடுத்த நாளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. ஆனால், தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் மட்டும் மழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை அவ்வப்போது லேசான மழை பெய்தது. சமீப நாட்களாக கனமழை பதிவாகவில்லை.
இந்நிலையில் வங்ககடலில் அந்தமானுக்கு அருகே உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருவதாகவும் மேலும் இது புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வரும் 14ம் தேதி முதல் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு கேரளா, குமரி, மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம்
என்றும் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தபட்டுள்ளது. 45-65 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.