ஆதார் இல்லாததால் உதவித்தொகை கிடைக்காமல் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்
கோவையில் ஆதார் அட்டை இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை கடந்த இரு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகள் சிறுவயதில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது நடமாட முடியாத மாற்றுத் திறனாளியாக வாழ்ந்து வருகிறார் (58). முதியோர் காப்பகத்தில் சேர்த்து பராமரிக்கப்படும் இவருக்கு, இரு மாதங்களுக்கு முன்பு வரை அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால் தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. எழுந்து நடமாடவே முடியாத தனது மகளை ஆதார் மையத்துக்கு அழைத்துச் சென்று கைரேகைகளை பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் அவரது பெற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதார் அட்டை விதியில் இருந்து விலக்கு அளிக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டது கண்டிக்கத்தக்க நடவடிக்கை என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சுமூக தீர்வு எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தைச் சேர்ந்த புனிதா என்பவர் தெரிவித்துள்ளார்.