திண்டுக்கல் | திடீரென முறிந்து விழுந்த மரம்.. அடியில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு
திண்டுக்கல்லில் சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரம் விழுந்து தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் ரவுண்டு ரோடு ராஜேந்திரா திரையரங்கம் அருகே சாலையில் ஓரத்தில் பழமையான புளியமரம் ஒன்று இருந்ததுள்ளது. அந்த மரத்தின் அடிப்பகுதி பட்டு போய் உள்ளது. இந்நிலையில், அப்பகுதி வழியாக ஆரோக்கியமாதா தெருவைச் சேர்ந்த குணசேகரன் என்பவது தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இவரைத் தொடர்ந்து இவரது சித்தப்பாவான சேவியர் என்பவரும் தனது இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்துள்ளார்.
அப்பொழுது பட்டுப்போய் இருந்த அந்த புளியமரமானது குணசேகரன் மீது விழுந்துள்ளது. இதில் மரத்துக்கு அடியில் சிக்கி குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறை பின்னர் மரங்களை வெட்டி குணசேகரனின் உடலை மீட்டனர். பின்னர் குணசேகரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பழமையான மரத்தை அகற்றக்கோரி ஏற்கனவே மனு அளித்ததாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இது குறித்து மாநகராட்சி தரப்பில் கேட்டபோது, புகார் மனு ஏதும் பெறப்பட்டதாக தெரியவில்லை என்றும், மரத்தின் மேல் பகுதி நன்றாக இருப்பதாகவும், அடிப்பகுதியே தற்போது உடைந்து விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.