கூலி தொழிலாளி மீது தாக்குதல் : உண்மையை மறைக்க பணம்கொடுத்த காவல்துறை
பழனியில் கூலி தொழிலாளியை தாக்கிவிட்டு அதனை மறைக்க காவல்துறையினரே பணம் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள கணக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளியான ராதாகிருஷ்ணன், குடியிருப்பு பிரச்னை தொடர்பாக ஆயக்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை விசாரித்த சார்பு ஆய்வாளர் கோகுலகண்ணன், ராதாகிருஷ்ணன் வீட்டிற்குச் சென்று கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ராதாகிருஷ்ணனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர் ராதாகிருஷ்ணனின் மனைவி மகாலட்சுமியை சந்தித்து மருத்துவ செலவுக்கு 1,500 ரூபாய் பணம் கொடுப்பதாக கூறியதுடன், நடந்ததை வெளியே சொல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தனது கணவரை தாக்கிய சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

