மருத்துவ அறிக்கை தாமதம்: தாமதமாகும் போக்சோ வழக்கு முடிவுகள்
மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தாமதம் ஏற்படுவதால் சென்னையில் பதிவாகிய 50% போக்சோ வழக்குகள் முடிக்க தாமதமாகிறது என்று தெரியவந்துள்ளது.
போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. சமீபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறையின் மாணிய கோரிக்கையில் போக்சோ சட்டம் தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. அதாவது தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் பதியப்படும் எண்ணிக்கை 25% உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையில் போக்சோ வழக்குகள் தாமதமாவதற்கு சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனை அறிக்கை வராததே காரணம் என்று தெரியவந்துள்ளது. சென்னையில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பதியப்பட்ட 250 போக்சோ வழக்குகளில் 120 வழக்கில் மருத்துவ பரிசோதனை அறிக்கை வராததால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யமுடியவில்லை என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் சென்னையில் அதிகபட்சமாக போக்சோ வழக்குகள் 6 ஆண்டுகள் நிலுவையில் உள்ளது.
போக்சோ சட்டத்தின்படி 10 வருடத்திற்கு கீழான சிறை தண்டனை வழக்காக இருந்தால் அதற்கு 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும். அதேபோன்று 10 வருடத்திற்கு மேல் சிறை தண்டனைக்குறிய போக்சோ வழக்காக இருந்தால் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும். அத்துடன் போக்சோ வழக்கில் 6 மாதங்களுக்குள் விசாரணை முடித்து தீர்ப்பு வழங்கவேண்டும் என்று போக்சோ சட்டம் தெரிவிக்கிறது.
எனினும் சென்னையில் நிலவும் இந்த தாமதத்திற்கு காரணம் அரசின் தடையவியல் ஆய்வுக் கூடத்தில் நிலவி வரும் ஆட்கள் குறைபாடே காரணம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.