’’கொங்குநாடு’’ எனக்குறிப்பிட்டது தட்டச்சுப் பிழையே: சர்ச்சைக்கு எல்.முருகன் முற்றுப்புள்ளி

’’கொங்குநாடு’’ எனக்குறிப்பிட்டது தட்டச்சுப் பிழையே: சர்ச்சைக்கு எல்.முருகன் முற்றுப்புள்ளி
’’கொங்குநாடு’’ எனக்குறிப்பிட்டது தட்டச்சுப் பிழையே: சர்ச்சைக்கு எல்.முருகன் முற்றுப்புள்ளி

எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றபோது, அவருடைய சுயவிவரக்குறிப்பில் ’’கொங்குநாடு’’ எனக் குறிப்பிட்டிருந்தது தட்டச்சுப் பிழையே என்று விளக்கமளித்திருக்கிறார்கள் தமிழக பாஜக தலைவர்கள். 

தமிழக மாநில பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றபோது அவருடைய சுய விவரத்தில் ’கொங்குநாடு’ என இடம்பெற்றிருந்தது. இது பல்வேறு சமூக ஊடகங்களில் மிகப்பெரிய விவாதப்பொருளானது. கொங்குநாடு தொடர்பான பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் ட்வீட்டும் விவாதமானது. இதுதொடர்பாக பல்வேறு கண்டனங்களும், எதிர்வினைகளும் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. இருப்பினும், பாஜக தலைமை தரப்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. நேரடியாக பாஜக தரப்பில் அந்த கருத்தினை தெரிவிக்கவில்லை. 

இதனைத் தொடர்ந்து மேற்கு மண்டலமான கொங்கு பகுதியை ஒருங்கிணைத்து கொங்குநாடு தனி மாநிலமாக உருவாக்க தருமபுரியில் பாஜக கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த செயல் கொங்குநாடு விவாதத்தில் மேலும் விவாதத்தை சூடுபிடிக்க வைத்தது. 

இந்நிலையில், தமிழக பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை இன்று சென்னை கமலாலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின்னர், அண்ணாமலை, எல்.முருகன், சி.டி ரவி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றபோது அவருடைய சுய விவரத்தில் ’கொங்குநாடு’ என இடம்பெற்றிருந்தது குறித்து செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது.

இதுகுறித்து அண்ணாமலை பதிலளித்தபோது, ‘’தற்போது ட்விட்டரில் அனைவருமே தங்களுடைய அடையாளமாக பாண்டிய நாடு, சோழ நாடு, கொங்குநாடு என போட்டுக்கொள்கின்றனர். அதுபோல முருகனும் தமிழ்நாட்டிலிருந்து மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட ஒருவர்’’ என்று கூறினார். அப்போது இடைமறித்த எல்.முருகன், ‘’இது விவாதத்திற்குரிய விஷயமே அல்ல; அது ஒரு தட்டச்சுப் பிழையே(Clerical mistake)’’ என்று கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தொடர்ந்து தருமபுரி பாஜக மாவட்ட கூட்டத்தில் கொங்குநாட்டை புதிய மாநிலமாக உருவாக்கவேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ‘’ஒரு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதில் எங்களுடைய சில தலைவர்களும் கலந்துகொண்டனர். உடனடியாக அந்த மாவட்ட தலைவரை தொடர்புகொண்டு கட்சியின் நிலைப்பாடு அது இல்லை என்றபோது எதற்காக இதுபோன்ற தீர்மானம் எடுத்தீர்கள் என்பது குறித்த விளக்கம் கேட்டிருக்கிறோம். எங்களுடைய நிலைப்பாடு அதுவல்ல என்பதை தெளிவுப்படுத்துகிறோம்’’ என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com