கோவை: உயிருக்கு போராடும் சிறுவனை காப்பதற்காக ஒன்றிணைந்து நிதி திரட்டும் கிராம மக்கள்
கோவையில் இதய செயழிலப்பால் உயிருக்கு போராடி வரும் 13 வயது சிறுவனுக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு கிராமமே ஒன்றிணைந்து நிதி திரட்ட களமிறங்கியுள்ளது. தங்களின் அந்த முயற்சியில், கிராம மக்கள் பாதி கிணறை இப்போதைக்கு தாண்டியுள்ளனர். அடுத்தடுத்து நிதி திரட்ட, தங்களின் அடுத்தகட்ட முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். இவர்களின் இந்த நெகிழ வைக்கும் கூட்டு முயற்சியின் பின்னணியும் விவரமும், கீழ்வருமாறு!
கோவை மதுக்கரை அடுத்த குரும்பபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜகுமார். இவரது இரண்டாவது மகன்தான் 13 வயதான பிருதிவிராஜ். தற்போது ஒன்பதாம் படித்து வரும் இச்சிறுவன் நன்றாக ஓடியாடி விளையாடி வந்தநிலையில் தற்போது இதய செயலிழப்பு காரணமாக கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன் சளி, இருமல் காரணமாக மருத்துவமனையை அணுகியபோது, சிறுவனுக்கு இதய செயலிழப்பு பாதிப்பு இருந்தது தெரியவந்ததாகவும், அன்று முதலே தனது மகனின் வாழ்வே நரகமாகிவிட்டது என்றும் கண்ணீர் மல்க சொல்கிறார் சிறுவனின் தாய் சாரதா.
தன் மகனின் நிலை குறித்து சாரதா பேசுகையில், “பணம் இல்லாததால் மருத்துவமனையில் வைத்து அவனை எங்களால் கவனிக்க முடியவில்லை. ஆனால் வீட்டில் வைத்து பார்த்துக்கொண்டாலும், மாதத்தில் 10 நாட்கள் கூட வீட்டில் இருக்க முடிவதில்லை. திடீரென வாந்தி, மயக்கம் என ஏதாவதொரு பிரச்னை வந்துவிடுகிறது அவனுக்கு. இதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழல் உள்ளது. எங்கள் கைமீறி சென்றுக்கொண்டிருக்கும் இந்த நிலையை எப்படி சமாளிப்பதென தெரியவில்லை” என அழும் அவருக்கு, ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை.
சிறுவன் பிருதிவிக்கு அறுவை சிகிச்சை செலவு தவிர்த்து பரிசோதனை, மருத்துவமனை படுக்கை என இதுவரை ரூபாய் 10 லட்சத்திற்கும் மேல் செலவாகியிருப்பதாக சொல்லும் தாய் சாரதா, அதற்காக கையிலிருந்த சேமிப்பு நிதி உட்பட அனைத்தையுமே செலவழித்துவிட்டதாக கூறுகிறார். அப்படியும்கூட ஈடுகட்ட முடியாததால் கடன் பெறுவது, தன் நகையை அடமானம் வைப்பது என்று பொருளாதாரத்தை அதிகப்படுத்தி தன் மகனின் உயிரை காப்பாற்றி வருகிறார் அவர்.
தற்போது சிறுவனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் தேவைப்படும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக்கேட்ட பின்னர், சிறுவனின் தந்தை விஜயகுமார், “இந்தளவுக்கு பணத்தை ஏற்பாடு செய்வதென்பது எங்களுக்கு முடியாத காரியம். அதிலும் கொரோனா காரணமாக மிகுந்த பொருளாதார பிரச்னையை சந்தித்து வரும் நிலையில், இது மிகவும் சிரமம். இப்போதைக்கு எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, குரும்பபாளையம் ஊர் மக்களின் உதவிதான். அதுமட்டுமே எங்களை உயிர்ப்புடன் வைத்துள்ளது” என தெரிவித்திருக்கிறார்.
இந்தளவுக்கு சிறுவனின் தந்தை தனது ஊர் மக்களை குறிப்பிட்டு சொல்ல காரணம் - சிறுவனின் நிலையையும், சிகிச்சைக்கு பணம் திரட்ட முயலும் அவனுடைய பெற்றோரின் நிலையையும் உணர்ந்த சிறுவன் பிறந்த வளர்ந்த கிராமமான குரும்பபாளையத்தை சேர்ந்த சில தன்னார்வ குழுக்கள், தங்களால் முடிந்த தொகையை தொடக்கத்திலிருந்தே வழங்கிவந்துள்ளனர் என்பதுதான். இருந்தபோதிலும், அறுவை சிகிச்சைக்கு போதுமான அளவுக்கு அவர்களால் பணம் திரட்ட முடியாமல் இருந்துள்ளது. இதை உணர்ந்த அவர்கள் ஒருகட்டத்தில் உணர்ந்திருக்கின்றனர். அதற்காக அவர்கள் உதவுவதிலிருந்து பின்வாங்கவில்லை. மாறாக, உதவ வேறு வழிகளை தேடியுள்ளனர். அதனொரு பகுதியாக தங்கள் பகுதியை சேர்ந்த அனைத்து மக்களையும் அவர்கள் நாடியுள்ளனர். அவர்களும், தங்கள் கிராமத்தை சேர்ந்த சிறுவனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களால் இயன்றளவுக்கு நிதியளித்து வந்துள்ளனர்.
இந்த முயற்சியில், குரும்பபாளையத்தை சேர்ந்த இளைஞர்கள் பலரும் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளனர். அவர்களின் முயற்சியால் தொழில்நுட்ப உதவியுடன் தற்போது பல வகைகளில் நிதி திரட்ட முயற்சித்து வருகின்றனர். இளைஞர்களின் முயற்சியால், சமூக வலைத்தளங்கள் உபயோகப்படுத்தும் ஊர் மக்கள் பலரும் அதன் வழியாக சிறுவனின் நிலையை எடுத்துக்கூறுவது, வெவ்வேறு ஊர்களிலுள்ள அவர்களின் உறவினர்கள், பணியிடத்திலுள்ள தங்களின் நண்பர்கள், அமைப்புகள் ஆகியோரிடமிருந்தெல்லாம் நிதியை பெற தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
ஊர்மக்களின் இந்த தன்னெழுச்சி முயற்சி, பலரின் பாராட்டையும் பெற்றுவருகிறது. குறிப்பாக சிறுவனின் தாய் தந்தைக்கு இது கூடுதல் பலம் கொடுத்துள்ளது.
குரும்பபாளையம் ஊர் சார்பில் மட்டும் இதுவரை ரூபாய் 5 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அது அன்றி பொதுமக்கள் - சில அமைப்புகள் சார்பில் கூடுதலாக ரூ. 5 லட்சம் நிதி சிறுவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ரூபாய் 8 லட்சம் சிறுவனின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பணமாக மருத்துவமனையில் செலுத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு தேவையான மீதமுள்ள தொகையை விரைவாக பெற பல வகைகளிலும் ஊர்மக்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
- ஐஸ்வர்யா