தேனி தீ விபத்து: உயிரை பொருட்படுத்தாமல் உதவிய கிராம மக்கள்..!
குரங்கணி தீ விபத்தில் சிக்கியர்வர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கிராம மக்களும் தங்களால் முடிந்த சிறு உதவிகளை செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்றம் சென்ற 36 பேர் மாட்டிக்கொண்டனர். சென்னை ட்ரெக்கிங் கிளப்பில் இருந்து சென்ற 22 பெண்கள் உள்பட 24 பேர், திருப்பூரில் இருந்து மற்றொரு குழுவாக சென்ற 12 பேர் என மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு கீழே இறங்கலாம் என அவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் மதிய சாப்பாட்டின்போது மலையில் திடீரென ஏற்பட்ட புகை மூட்டம் அவர்களை சூழ ஆரம்பித்திருக்கிறது. இதனையடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் அவர்கள் தவித்திருக்கின்றனர். அப்போது அங்கிருந்த நந்நினி என்ற மாணவி உடனே குரங்கனி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார். தான் உள்பட டிரெக்கிங்கிற்காக மலைக்கு வந்த பலரும் மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருப்பதாக போலீசாரிடம் கூறியிருக்கிறார். மாலை 4.45 மணியளவில் போலீசாருக்கு இந்த விஷயம் தெரியவர சிறிதுநேரத்தில் செய்தி அனலாய் பறந்தது. தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் உள்ளிட்ட பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தேவையான மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் பழனிசாமியும் உத்தரவிட்டார். தகவலறிந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீட்பு பணிகளுக்காக விமானப்படை ஹெலிகாப்டர்களை அனுப்ப உத்தரவிட்டார்.
இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு முன்னதாக மலைப்பகுதியை சுற்ற ஆரம்பித்தனர். அவர்கள் தங்களால் முடிந்த சிறுசிறு உதவிகளையும் செய்தனர். மலையில் எரியும் தீயை அணைக்க தங்களால் முயன்ற முயற்சிகளை மேற்கொண்டனர். இதுதவிர தீயில் சிக்கியவர்களை மீட்பதற்காக சம்பவ இடத்திற்கு வந்த வீரர்களுக்கும் தண்ணீர் கொடுப்பது, மீட்கப்பட்டவர்களை விரைவாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்ட தங்களால் முடிந்த பணிகளை செய்தனர். விபத்து குறித்து கிராம மக்கள் கூறும்போது, கடந்த ஒரு வாரமாகவே தீ எரிந்து வருகிறது. ஆனால் எப்படி அவர்கள் மலையில் ஏறினார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் ஏறும்போது தீ எரியாமல் இருந்திருக்கிலாம் என்றார்.