குரங்கணி தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை: முதல்வர் உறுதி
குரங்கணி தீ சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 40 பேர் சிக்கினர். இரண்டு குழுக்களாக மலையேற சென்ற இவர்கள், திங்கட்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் 12 பேர் திருப்பூரில் இருந்து சென்றவர்கள் என்றும், 24 பேர் சென்னையில் இருந்து சென்றவர்கள் என்றும் அறியப்பட்டுள்ளது. தீயில் சிக்கிய 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 10பேருக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் குரங்கணி தீ சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ குரங்கணி மலைப் பகுதியில் தீயில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை முடுக்கிவிட வனத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளேன். வனத்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும். குரங்கணி தீ சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.