வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டிக்கு பயணமா? இதை கொஞ்சம் கவனியுங்கள்!
உதகையில் சீசன் துவங்கியுள்ள நிலையில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையை நாளை முதல் (16-ம் தேதி) முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர். இந்த வருடம் தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் குளிரான மலைப்பிரதேசங்களுக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், உதகையில் தற்போது சீசன் துவங்கியுள்ளதால் ஆயிரகணக்கான வாகனங்கள் தினமும் சமவெளிப் பகுதிகளில் இருந்து வந்து செல்வது வழக்கம். அப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் சுற்றுலாப் பயணிகள் மலைப் பாதையில் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்கும் வகையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையை நாளை முதல் (16-ம் தேதி) முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்ட்டுள்ளது. அதேபோல, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர், உதகைக்கு வரும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படவுள்ளது. மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி வரும் இதர வாகனங்கள் குன்னூர் வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படவுள்ளன. உதகையில் இருந்து கோவை மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட இருக்கின்றன. அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும். இந்த மாற்றங்கல் நாளை முதல் அமல்படுத்தப்படவுள்ளாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.