No திமுக.. அரசியலுக்கு குட்பை.. குன்னம் ராமச்சந்திரன் திடீர் முடிவு!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான குன்னம் ராமச்சந்திரன், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பிரச்னைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரத்தில் அதிருப்தியில் மூத்த அரசியல் கட்சித் தலைவர்கள் கட்சி மாறி வருகின்றனர். அதிலும் அதிமுகவில் இருந்த மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான சிலர் வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், மருது அழகுராஜ், அன்வர் ராஜா, சுப்புரத்தினம் ஆகியோர் சமீபத்தில் திமுகவில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அதன்பிறகு, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக அறியப்பட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமும் நேற்று திமுகவில் இணைந்தார்.
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு ஆதரவாளரும், குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணைவார் என செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார். மேலும், அரசியல் பொதுவாழ்வில் இருந்தும் தாம் விலகுவதாகவும், எந்த அரசியல் கட்சியிலும் இணையும் எண்ணமில்லை எனவும், குடும்பத்தினர் கூறியதால் திமுகவில் இணையும் முடிவிலிருந்து பின்வாங்கினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் குன்னம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் குன்னம் ராமச்சந்திரன். 2021-ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.

