காட்டு யானை தாக்கி கும்கி யானை காயம் ! மருத்துவர் இல்லாததால் தாமதமாகும் சிகிச்சை

காட்டு யானை தாக்கி கும்கி யானை காயம் ! மருத்துவர் இல்லாததால் தாமதமாகும் சிகிச்சை

காட்டு யானை தாக்கி கும்கி யானை காயம் ! மருத்துவர் இல்லாததால் தாமதமாகும் சிகிச்சை
Published on

கோவையில் காட்டு யானையால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ள கும்கி யானைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த சாடிவயலில் யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு சேரன் மற்றும் ஜான் என்ற இரு கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த யானைகளுக்கு நலவாழ்வு முகாம் நடைபெற்று வருவதால் இந்த இரு யானைகளுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு சிறப்பு உணவுகள் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, திடீரென யானைகள் முகாமிற்குள் புகுந்து கும்கி யானை சேரனை கடுமையாக தாக்கியது. இதில் நிலைகுலைந்த சேரன் யானை அங்கேயே விழுந்தது. காட்டு யானை தாக்கியதில் சேரனுக்கு முதுகிலும் இடது பக்க பின்னங்காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு இருந்த யானை பாகன்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் உடனடியாக பட்டாசு வெடித்து அந்த ஒற்றை காட்டு யானையை விரட்டினர். மேலும் யானைகளுக்கு பாதுகாப்பாக அருகிலேயே இருந்தனர். இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அங்கு வந்த போளுவாம்பட்டி வனச்சரகர் பழனிராஜா யானையின் உடல் நலம் குறித்து பாகன்களிடம் கேட்டறிந்தார். கால்நடை மருத்துவர்கள் ஆலோசனைப்படி காயம்பட்ட யானைக்கு மருந்துகள் அளிக்கப்பட்டு உள்ளது. எனினும் வனத்துறை மருத்துவர்கள் யாரும் இல்லாததால் இதுவரை சேரன் யானைக்கு உயர் சிகிச்சை அளிக்கப்படவில்லை. பல வருடங்களாக கோவை மண்டலத்தில் மருத்துவர்கள் இல்லாததால் காயம்படும் விலங்குகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். உடனடியாக காயம் பட்ட யானைக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கோவை மண்டலத்தில் வனத்துறை மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com