கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: 7 பேர் விடுவிப்பு தீர்ப்பின் விவரம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: 7 பேர் விடுவிப்பு தீர்ப்பின் விவரம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: 7 பேர் விடுவிப்பு தீர்ப்பின் விவரம்
Published on

கும்பகோணம் பள்ளி தீ விபத்து மேல்முறையீட்டு வழக்கில், பள்ளியில் நிறுவனருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை குறைத்தும், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 7 பேரை விடுவித்தும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.

கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப்பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் 2014 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து ஏப்ரல் மாதம் ஒத்திவைக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வைத்து நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், வி.எம்.வேலுமணி நேற்று வெளியிட்டனர்.

தீர்ப்பில், பள்ளி நிறுவனர் பழனிசாமிக்கு தஞ்சை நீதிமன்றம் விதித்த‌ தண்டனையை மாற்றியமைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து சிறையிலிருந்த காலத்தை தண்டனை காலமாகக் கருதி, அவருக்கான அபராத தொகையையும் ரூ.1,16,500 ஆக குறைத்துள்ளதாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், சமையல்காரர் வசந்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருடைய மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் ரத்து செய்தாலும், அவர் சிறையிலிருந்த காலத்தையே தண்டனை காலமாக கருதுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதனால், பள்ளியின் நிறுவனர் பழனிசாமி, சமையல்காரர் வசந்தி ஆகியோர் இனி தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லாததால், இருவரும் விடுதலையாகவுள்ளனர்.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட சாந்தலட்சுமி, விஜயலட்சுமி, பாலாஜி, தாண்டவன், துரைராஜ், சிவப்பிரகாசம், ஜெயசந்திரன் ஆகியோருக்கு கீழ்நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனை, அபராதம் ஆகியவற்றை ரத்து செய்து, அவர்களை வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். மேல்முறையீடு செய்த 10 பேரில் தாளாளர் சரஸ்வதி வழக்கு நிலுவையிலிருக்கும் போதே உயிரிழந்துவிட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கைவிடப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com