“தாமரைக் கோலம் போட்டால் ரூ.1000” - வதந்தியால் பரபரப்பு
வீட்டு வாசலில் தாமரைக்கோலம் போட்டு, அகல் விளக்கு ஏற்றினால் ரூ.1000 வழங்கப்படும் என்ற வதந்தி கும்பகோணத்தில் பல குடும்பங்களை ஏமாறச் செய்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி வேலைகளில் மும்முரமாக உள்ளது. அத்துடன் விருப்பமனு, பொதுக்கூட்டங்கள் என தேர்தல் திருவிழாவும் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் அதிமுக-பாமக-பாஜக கூட்டணி உறுதியாகி, தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. ஆங்காங்கே பிரச்சாரங்களும் பேச்சுகளும் தொடங்கிவிட்டன. பல இடங்களிலும் வாக்குக்கு பேரங்கள் நடைபெற்று வருகின்றன. வாக்குகளை விற்கக்கூடாது என்பதற்காக, புதிய தலைமுறை சார்பில் #என்வாக்குவிற்பனைக்குஅல்ல என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கும்பகோணம் ஆனக்காரபாளையம் பகுதியில் சிலர் வதந்தி ஒன்றை பரப்பியுள்ளனர். அதன்படி, வீட்டு வாசலில் தாமரைக் கோலத்தை வரைந்து, அதன் நடுவே அகல் விளக்கை ஏற்றினால் ரூ.1000 அல்லது அந்த தொகைக்கு நிகரான பரிசுப் பொருள் வழங்கப்படும் என வதந்தி பரவியுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள பல வீடுகளில் வசிப்போர், தங்கள் வீடுகளில் தாமரைக் கோலத்தை போட்டு விளக்கையும் ஏற்றி வைத்து காத்திருந்துள்ளனர். ஆனால் யாருமே வந்து ரூபாயோ அல்லது பரிசுப்பொருளோ தரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பாஜக கட்சிக்காரர்கள் தான் அகல் விளக்கை கொடுத்து தாமரை சின்னத்தை கோலமாக வரைந்தால், ரூ.ஆயிரம் அல்லது பரிசுப் பொருளோ வழங்கப்படும் என்று கூறியதாக தெரிவித்தனர். ஆனால் பா.ஜ.க. நிர்வாகிகளிடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு, அதுபோன்று யாரிடமும் கூறவில்லை என்று மறுத்தனர்.