“மேலாண்மை ஆணைய திட்ட வரைவில் தவறுகள் உள்ளது” - குமாரசாமி
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனவும், சட்டரீதியாக போராடப்போவதாகவும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
தலா 9 உறுப்பினர்களைக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்கள் வரையறுத்துள்ள திட்டத்தில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டு நீர் பங்கீட்டு சட்டம் திருத்தித் திணிக்கப்பட்டுள்ளது. ஆணையம் செயல்படுத்துவதில் தொழில்நுட்ப ரீதியாக உள்ள பிரச்னைகள், எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் மற்றும் திட்ட வரைவில் தவறுகள் உள்ளது. அது எல்லாம் சரிசெய்து மேலாண்மை வாரியம் அமைப்பதில், எந்தச் சிக்கலும் இல்லை என தெரிவித்திருந்தோம்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத நீர்வளத்துறையை சேர்ந்த ஒருவரை நியமித்துள்ளேன். கர்நாடக அட்வகேட் ஜெனரலையும் ஆலோசனை நடத்த அழைத்துள்ளேன். இந்த விவகாரத்தில் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் இறுதியாக உள்ள நேரத்தில், கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து சட்டரீதியாக போராடுவோம். இது தொடர்பாக ஆலோசனை நடத்த 15 நாட்களுக்குப் பிறகு அவகாசம் வழங்குவதாக மத்திய நீர்வள அமைச்சகம் கூறியுள்ளது. நாங்கள் கொடுத்து வரும் மரியாதையை யாரும் பலவீனம் என எண்ணிவிட வேண்டாம். மீண்டும் நான் மத்திய அரசை வலியுறுத்துவேன்.” என்றார்.