காதலி தூக்கிட்ட செய்தி கேட்டு காதலனும் எடுத்த விபரீத முடிவு - அடுத்தடுத்த வீடுகளில் சோகம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலூரில் அடுத்தடுத்த வீடுகளில் காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர் அருகேயுள்ள பாகலூரைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (24). தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்த இவரும், கர்நாடக மாநிலம் கனகபுராவை சேர்ந்த இவரது உறவினரான சோனியா (22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பாகலூர் சீரிடிசாய் நகரில் மஞ்சுநாத் வீட்டின் அருகில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சோனியா வந்துள்ளார். இவர்களது காதல் இரண்டு வீட்டாருக்கும் தெரியவர கடும் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து மஞ்சுநாத், சோனியாவுடன் நள்ளிரவு வரை போனில் பேசி ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை சோனியா தனது உறவினர் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிந்ததும், மஞ்சுநாத் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காதலுக்கு இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதால் ஒன்றுசேர முடியாத ஏக்கத்தில் இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பாகலூர் போலீசார் தற்கொலை குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.