சாதிக்க எதுவும் தடையில்லை.. மருத்துவர் ஆக போகும் காவலர்.. - சாதித்து காட்டிய தருமபுரி இளைஞர்!

காவல்துறையில் பணி செய்துக்கொண்டே நீட் தேர்வுக்கு சுயமாக படித்து வெற்றிபெற்று மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்த இளம் காவலர் பற்றிய செய்திக்குறிப்பினை பார்க்கலாம்.
காவலர் சிவராஜ்
காவலர் சிவராஜ்PT Desk

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள முதுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். 24 வயதான இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் மூன்று ஆண்டுகளாக காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு பென்னாகரம் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 915 மதிப்பெண் பெற்ற சிவராஜ்க்கு, மருத்துவராக வேண்டும் என்பதே ஆசை. ஆனால், அவர் பெற்ற மதிப்பெண்கள் அந்த கனவு நிறைவேற போதுமானதாக இல்லை. அதன்பின்னர் கல்லூரியில் இளங்கலை (பி.எஸ்.சி.) சேர்ந்து படித்து முடித்த சிவராஜ், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காவலருக்கான தேர்வில் வெற்றிபெற்று பயிற்சி முடித்து ஆவடி பட்டாலியனில் கடந்த மூன்று ஆண்டுகளாக காவலராக பணிபுரிந்து வருகிறார்.

காவலர் சிவராஜ்
காவலர் சிவராஜ்

சிவராஜின் தந்தை மாணிக்கம், தாய் இன்பவள்ளி இருவருமே விவசாய கூலிகள். வறுமையின் காரணமாக பட்டப்படிப்பை முடித்தவுடன் ஏதோ ஒரு வேலைக்கு செல்லலாம் என்று இருந்த சிவராஜ் காவலராக தேர்வாகி பணிபுரிந்து வந்த போது ஏன் நீட் தேர்வு எழுதி தனது மருத்துவராகும் கனவை நிறைவேற்றக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இருந்த சிவராஜ் தனது வேலைகளுக்கிடையில் நீட் தேர்வுக்காக ஆயத்தமானார். சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்திற்கு கொடுத்து உதவும் நிலையில் இருந்த சிவராஜ்-க்கு தனியாக பயிற்சி மையங்களில் சேர்ந்து நீட் தேர்வுக்காக தயாராகவதற்கான சூழல் இல்லை. தானே நண்பர்கள் மூலம் புத்தகங்களை சேகரித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக படித்து பயிற்சி பெற்றுள்ளார் சிவராஜ்.

கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் கலந்து கொண்ட சிவராஜ்-க்கு 290 மதிப்பெண்கள் தான் கிடைத்தது. என்றாலும் விடாமுயற்சியாக மீண்டும் கடந்த ஒரு வருடமாக படித்து இந்த முறை 400 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்திருந்த சிவராஜுக்கு இன்று மருத்துவக் கல்லூரியில் நடந்த கலந்தாய்வில் கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கான இடம் கிடைத்துள்ளது.

காவலர் சிவராஜூக்கு மருத்துவ கல்லூரி ஒதுக்கப்பட்ட அறிவிப்பு பலகை
காவலர் சிவராஜூக்கு மருத்துவ கல்லூரி ஒதுக்கப்பட்ட அறிவிப்பு பலகை

வறுமையாலும் சூழலாலும் வாய்ப்பு தள்ளி போனாலும், மீண்டும் ஒரு வாய்ப்பு வரும் போது எட்டிப் பிடிக்க முயன்றுக்கொண்டே இருந்தால் எட்டாக்கனி என்பது எதுவுமே இல்லை என்பதற்கு காவலர் சிவராஜ் ஒரு உதாரணம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com