கிருஷ்ணகிரி: கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
மாத்தூர் அருகே குறுக்கு வழியில் ஊர் திரும்பியபோது 60 அடி ஆழ கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த பொம்மேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் சங்கர் (22). இவர், நேற்று மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் சேட்டு என்பவருக்குச் சொந்தமான டிராக்டரை எடுத்துக்கொண்டு வாடகைக்குச் சென்றுள்ளார். பின்னர், ஊர் திரும்பிய அவர், ஊரைச்சுற்றி வரும் பிரதான சாலையில் செல்லாமல் குறுக்கு வழியில் திரும்பி வந்துள்ளார்.
அப்போது பாண்டவர்குட்டை கிராமத்தில் காமாட்சி என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றை கடக்க முற்படும்போது எதிர்பாராதவிதமாக சுமார் 60 அடி கிணற்றுக்குள் டிராக்டர் கவிந்து விழுந்துள்ளது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சங்கரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் டிராக்டரின் அடிப்பகுதியில் சங்கர் சிக்கிக்கொண்டதால் அவரை மீட்க முடியவில்லை.
இதையடுத்து பருகூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் 4 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு டிராக்டருக்கு அடியில் சிக்கி தலையில் பலத்த காயத்துடன் கிடந்த சங்கரை சடலமாக மீட்டனர். பின்னர், சடலத்தை கைப்பற்றிய மத்தூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.