கிருஷ்ணகிரி | தோட்டத்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி நகை, பணம் கொள்ளை – போலீசார் விசாரணை
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பகிள்ளி அடுத்த தொட்டமெட்டறை கிராமத்தில் விவசாய நிலத்தை குத்தகை எடுத்து தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர்கள் கோவிந்தம்மாள் (55) - ராஜா (60) தம்பதியர். இந்நிலையில், நேற்றிரவு கோவிந்தம்மாள், ராஜா ஆகியோருடன் மருமகன் ராமச்சந்திரன் (33), பேத்தி வர்ஷினி (9) ஆகிய 4பேர் இருந்துள்ளனர். அப்போது முகமுடி அணிந்தபடி 7 பேர் காரில் வந்துள்ளனர்.
இதையடுத்து வீட்டிற்கு வெளியே இருந்த கோவிந்தம்மாளை ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டய நிலையில், மீதமிருந்த 6 பேர் வீட்டிற்குள் நுழைந்து தோடு, தாலிச் சங்கிலி என 8.5 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டுள்ளனர். அப்போது வீட்டினுள் இருந்த மருமகன் ராமச்சந்திரன் கொள்ளையர்களுடன் சண்டையிட்டதில் பலத்த காயமடைந்த அவர், கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக பீரோவில் இருந்த ரூ.3.60 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்துச் சொன்றுள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த உத்தனப்பள்ளி போலிசார், கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.