ஒகேனக்கலில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: 8வது நாளாக பரிசலுக்கு தடை
கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையினால் ஒகேனக்கலில் பரிசல் இயக்குவதற்கு 8வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சூளகிரி, மேடுப்பள்ளி, கொள்ளப்பள்ளி, மாதரசனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பல மணிநேரம் கனமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக, காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு நீர்நிலைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீர்வரத்து அதிகரிப்பால் ஒசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து 2,800 கனஅடி நீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரங்களிலுள்ள ஆழியாளம், பாத்தகோட்டா, தொரப்பள்ளி உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஓசூரை அடுத்த அஞ்செட்டியில் பெய்த கனமழையால், ஒகேனக்கல் செல்லும் தற்காலிக தரைப்பாலம் 4வது முறையாக சேதமடைந்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு நாட்றாம்பாளையம், ஜேசுராஜபுரம், கேரட்டி, ஒகேனக்கல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.