கிருஷ்ணகிரி: தனியார் ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து என எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: தனியார் ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து என எச்சரிக்கை
கிருஷ்ணகிரி: தனியார் ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து என எச்சரிக்கை

தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் எனவும், கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளிகள், தமிழக அரசின் 108 அவசர கால வாகனங்களின் மூலம் இலவசமாக மருத்துவமனைகளுக்கும், பல்வேறு சிகிச்சை மையங்களுக்கும் அழைத்து வரப்படுகின்றனர்.

அதன்படி தமிழக முதல்வர் பொதுமக்களின் நலன் கருதி, நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில், அவர்களின் அவசர தேவைகளை கருத்தில் கொண்டு தனியார் அவசர வாகனங்களுக்கு நிலையான கட்டணம் வசூலிக்க நிர்ணயித்துள்ளனர்.

நோயாளிகளை அழைத்துச் செல்லும் வாகனத்திற்கு, 10 கி.மீ., வரை, 1500 ரூபாயும், அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும், 25 ரூபாயும், ஆக்சிஜன் வசதியுடன் உள்ள வாகனத்திற்கு 10 கி.மீ., வரை 2,000 ரூபாயும், அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும், 50 ரூபாயும், அட்வான்ஸ் லைப் சப்போர்ட் வாகனத்திற்கு, 10 கி.மீ., வரை, 4,000 ரூபாயும், அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 100 ரூபாயும் வசூலிக்க வேண்டும்.

வாகன ஓட்டி, செவிலியர் இருவரும் தகுந்த அனுபவத்துடன் பாதுகாப்பு உடை அணிந்திருக்க வேண்டும். அனைத்து அவசரகால பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை மருந்துகளும், கருவிகளும் உடன் இருக்க வேண்டும். அரசு வழிகாட்டுதலை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால், 104 எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com