ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் களத்தில் இருக்கும் பிரச்னை அவருக்குத் தெரியும் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.
ரஜினி தனது ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் பேசி வரும் பேச்சுக்கள் அரசியலுக்கு அவர் வருவாரா, மாட்டாரா என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ரஜினி தன்னை சிறந்த நிர்வாகி என்று சொன்னதற்காக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ரஜினி, பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால்தான் களத்தில் உள்ள பிரச்னை அவருக்குத் தெரியும் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி கூறியுள்ளார். மேலும், ரஜினி அரசியலுக்கு வந்தால் அதிமுக எனும் ஆலமரத்திற்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம், யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்கள் மக்கள்தான் என்று கூறியுள்ளார்.