’திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும்; ஓபிஎஸ் நிச்சயம் பங்கேற்பார்’ - கே.பி.முனுசாமி
திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23ஆம் தேதி நடைபெறும், பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்பார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி.முனுசாமி பேட்டியளித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தனியார் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், விஜயபாஸ்கர், பெஞ்சமின், தளவாய் சுந்தரம், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், காமராஜ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ’’வருகின்ற 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். அதற்கான அழைப்பிதழ்கள் முறைப்படி அனுப்பப்பட்டு, அழைப்பிதழ் சென்றதற்கான அத்தாட்சியும் தற்போது தலைமை கழகத்திற்கு வந்துள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என ஓபிஎஸ் எழுதிய கடிதம் கிடைக்கவில்லை, கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் அனைத்தும் முடிந்து உள்ளதால் பொதுக்குழுவை உடனடியாக கூட்டி அதற்கான ஒப்புதலை பெற்று தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். சிறப்பு அழைப்பாளர்கள் இல்லாமல் இந்த கூட்டத்தை நடத்தலாம்; அவர்களுக்கு என வேறு ஒரு கூட்டத்தை பிறகு கூட்டி கொள்ளலாம் என பேசியவர் ஓபிஎஸ் தான். அதுமட்டும் இல்லாமல் பொதுக்குழுவில் நிறைவேற்ற உள்ள தீர்மானங்களுக்கு ஒப்புதலும் அளித்துள்ளார்.
இந்த பொதுக்குழு கூட்டத்திற்காக அனைத்து ஊர்களில் உள்ள தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர். ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் உள்ளதா இல்லையா என்பது எல்லாம் பொதுக்குழு கூட்டத்தில் பேச வேண்டிய விஷயம். அதனை வெளியே சொல்லவேண்டிய அவசியம் இல்லை. மீண்டும் கட்சி ஆட்சிக்கு வரவேண்டிய நடவடிக்கைகள் பொதுக்குழு கூட்டத்தில் இடம்பெறும்.
பொதுக்குழு என்பது உட்சபட்ச அதிகாரம் பெற்றது, இந்த பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கடிதம் எழுதியுள்ளனர். எனவே நிச்சயம் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்பார். அதில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை கழக நிர்வாகிகள் என அனைவரும் கட்டுபடுவோம் எனத் தெரிவித்தார்.