கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் வரத்தடை : பூ, பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றம்
கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையில் நேற்றுவரை வியாபாரம் செய்த 54 வயது பூக்கடைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்பம் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் சென்ற பலருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து நடமாடும் வாகனம் மூலம் கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை மாநகராட்சியின் நெறிமுறைகளின்படி, மேலும் 3 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானால் கோயம்பேடு சந்தை மூடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு சந்தை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த வியாபாரம் மட்டும் கோயம்பேடு சந்தையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை மாநகராட்சி மைதானங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது.