இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் கோவையில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரின் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார். இவர் கடந்த 2016 செப்டம்பர் 22ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகியோரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்திருந்தனர். சிபிசிஐடி வசமிருந்த சசிகுமார் கொலை வழக்கு கடந்த ஜனவரியில் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் இந்து பிரமுகர் கொலை தொடர்பான வழக்கில், முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்திருந்த பாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை சாய்பாபா காலனி, உக்கடம் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது.

