கோவை ரகு மரணம்... யூகத்தின் அடிப்படையில் தவறான தகவல் பரவுகிறது: காவல்துறை
கோவையில் மென்பொறியாளர் ரகுபதி விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில், யூகத்தின் அடிப்படையில் தவறான கருத்துகள் பரவி வருவதாக கோவை மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்தியில், கோவை அவிநாசி சாலையில் கடந்த 25ஆம் தேதி ரகுபதி மீது லாரியை மோதி உயிரிழப்பு ஏற்படுத்திய, ஓட்டுநர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் மோட்டார் வாகன தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
விபத்து நடைபெற்ற அசாதாரண சூழலில், யூகத்தின் அடிப்படையில் செய்தி பரவுவது, எதிர்காலத்தில் விபத்துகளை ஏற்படுத்தும் ஓட்டுநர்கள் சமூகத்தின் பார்வையிலிருந்து தப்பிக்க வழி வகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மென்பொறியாளர் ரகுபதி விபத்தில் உயிரிழந்த வழக்கில், கோவை மாநகர காவல்துறையினர் சீரிய முறையில் புலனாய்வு செய்து குற்றவாளியை கைது செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், விபத்து தொடர்பான சிசிடிவி கேமராக் காட்சிகள் சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு வெளியிடப்படும் என கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.