திருவிழா தீக்குண்டத்தில் கரகத்துடன் இறங்கியவர் படுகாயம்
மதுரை கோயில் திருவிழாவில் நடைபெற்ற தீக்குண்டத்தில் கரகத்துடன் இறங்கிய பூசாரி தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
மதுரை அண்ணா நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் 41ஆம் ஆண்டு உற்சவ விழா கடந்த 5-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 12ஆம் தேதி காலை பால்குடம், வேல் மற்றும் 40 அடி அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். அன்று மாலை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் இருந்து கரகம், அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோயில் பூசாரியான மகாலிங்கம் கரகத்துடன் அக்னி குண்டத்தில் இறங்கினார். அப்போது அவர் அக்னி குண்டத்திலேயே தவறி விழுந்தார். இதில் தீக்காயமடைந்தவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் 45% தீயால் பாதிக்கப்பட்ட அவர், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். பூசாரி மகாலிங்கம் அக்னி குண்டத்தில் விழும் காட்சியும் வெளியாகியுள்ளது.