கொடுங்கையூர் குழந்தைகள் பலிக்கு அனுதாபம் மட்டும் போதாது:கமல்ஹாசன்
கொடுங்கையூர் குழந்தைகள் பலிக்கு அனுதாபம் மட்டும் போதாது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் பாவனா, யுவஸ்ரீ என்ற 2 சிறுமிகள் உட்பட 5 சிறுவர்கள் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரப் பெட்டி ஒன்று திறந்த நிலையில் கிடந்தது. அது பராமரிப்பும் இன்றி இருந்தது. அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் திடீரென கசிந்த மின்சாரம் சிறுவர்கள் மீது பாய்ந்தது. இதில் 3 சிறுவர்கள் அங்கிருந்து தப்பித்தனர். ஆனால் பாவனா, யுவஸ்ரீ இருவரையும் மின்சாரம் தாக்கியது. அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்க தீவிரமாக போராடியும், பலனின்றி 2 சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து 8 மின்வாரிய அதிகாரிகளை அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது. செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ள கமல் "கொடுங்கையூரில் குழந்தைகளின் கொடும் சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் மட்டும் அரசு செய்தால் போதாது. இனிமேலும் இதை போன்ற சம்பவங்கள் நிகழாதிருக்க என்னவெல்லாம் செய்ய வேணடுமோ அவை அனைத்தையும் உடனடியாக செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.