கொடைக்கானல்: பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் பலி
கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று விட்டு காரில் சொந்த ஊர் திரும்பிச் சென்றபோது 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள தேனூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கோகுல். இவர் அவரது மனைவி நந்தினி, மாமியார் அழகுராணி குழந்தை தன்யா மற்றும் நண்பர் கார்த்தி ஆகியோருடன் கொடைக்கானல் சுற்றுலா சென்று விட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் சாலையில் காரை திரும்பிய போது மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக சாலை சரியாக தெரியாத காரணத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார், 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து பெரியகுளம் தீயணைப்புத் துறை மற்றும் பெரியகுளம் வடகரை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து சென்ற பெரியகுளம் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் வழக்கறிஞர் கோகுலின் மனைவி நந்தினி, குழந்தை தன்யா மற்றும் மாமியார் அழகு ராணி ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வழக்கறிஞர் கோகுல் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோர் பலத்த காயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பெரியகுளம் வடகரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.