கீழடியில் மட்டுமல்ல, கொடைக்கானலிலும் கொட்டிக் கிடக்கும் வரலாற்றுச் சுவடுகள்!
கீழடி நாகரிகத்திற்கும் முந்தைய, 3000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தொல்லியல் சின்னங்கள், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானல் என்றாலே குளிர்சியான காலநிலை, ரம்மியமான வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள்தான் அனைவரின் மனதிலும் நிழலாடும். ஆனால் அத்தகைய ரம்மியமான மலைகளின் இளவரசி தன்னுள் கற்கால நாகரிகத்தின் எச்சங்களை கொண்டிருக்கிறாள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் பாண்டியர் காலத்து வணிகப்பாதையின் தலைவாசல்கள், கோட்டோவியங்கள், திசை காட்டும் கட்டடங்கள் 600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கொடைக்கானல் தாலுகாவில் இருக்கும் அடுக்கம் மற்றும் தாண்டிக்குடி வனத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தெரிவித்துள்ளார்
வணிகப்பாதைகள் மட்டுமின்றி 3,000 ஆண்டுகள் தொன்மையான கற்திட்டைகளும் கண்டறியப்பட்டுள்ளன. தாண்டிக்குடி, எதிரொலிப்பாறை, பாலமுருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் பண்டைய கற்திட்டைகள் காணப்படுகின்றன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் 2,600 ஆண்டுகள் தொன்மையான பொருள்கள் கிடைத்துள்ள நிலையில், அதற்கு 400 ஆண்டுகள் முந்தைய குறிஞ்சி நில நாகரிகத்தின் எச்சங்கள், கொடைக்கானல் மலைப்பகுதிகளின் பல இடங்களில் காணப்படுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 3 முதல் 7 அடுக்கு கட்டடங்கள் இங்கு கட்டப்பட்டுள்ளதாக அவர்கள் வியப்போடு தெரிவிக்கின்றனர். அத்தகைய வரலாற்று சின்னங்கள் சேதமடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
வரலாற்று சுவடுகள் சேதப்படுத்தப்படுவதாக எழும் புகார் குறித்து சுற்றுலா அலுவலர் பாலமுருகன் மற்றும் கோட்டாட்சியர் சுரேந்தரிடம் கேட்ட போது, பண்டைய கற்திட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் வரலாற்று சின்னங்கள் உள்ள இடத்தில் அதுகுறித்த தகவல்கள் அடங்கிய பதாகைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். தமிழரின் பண்டைய நாகரிகத்தை அறிய கீழடியைப் போல கொடைக்கானல் மலைப்பகுதிகளிலும் மத்திய, மாநில அரசுகள் தொல்லியல் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.