கிரிஜா வைத்தியநாதன் மத்திய உள்துறை அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு?
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மத்திய உள்துறை பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன் காவேரி மருத்துவமனை கருணாநிதியின் உடல்நிலை குறித்த 7வது அறிக்கையை வெளியிட்டது. அதில், கடந்த சில மணி நேரமாக கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. தொடர் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவேரி மருத்துவமனை வெளியில் குவிந்து இருக்கும் திமுக தொண்டர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் திடீரென கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மத்திய உள்துறை பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்துள்ளார். பாதுகாப்புக்காக உதவி கேட்கப்படும் பட்சத்தில் உதவிகள் செய்யப்படும் என உள்துறை அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன.