புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கிரண் பேடி!
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, திடீரென முதல்வர் நாராயணசாமி வீட்டிற்கு சென்று அவருக்கு சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்று இன்றுடன் இரண்டாண்டு நிறைவடைகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆளுநராக இருக்க மாட்டேன் என்று கூறியபடி கிரண்பேடி பதவி விலக வேண்டும் என நாராயணசாமி கூறியிருந்தார். மேலும் நேற்று மாலை நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்கு கிரண்பேடி அழைப்பு விடுத்தும் முதல்வர் நாராயணசாமி , அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.
இன்று காலை ஆளுநர் மாளிகையில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட கிரண்பேடி சாலையில் இருந்த துப்புரவு தொழிலாளர்கள், பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவலர்களுக்கு சால்வை அணிவித்தார். பின்னர் திடீரென முதலமைச்சர் நாராயணசாமியின் வீட்டிற்கு சென்ற அவர், நாளை பிறந்தநாள் காணும் நாராயணசாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இரண்டாண்டு நிறைவு செய்த கிரண்பேடிக்கு நாராயணசாமி பதிலுக்கு சால்வை அணிவித்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கிரண்பேடி அருகில் உள்ள சபாநாயகர் வீட்டிற்கு சென்று அவருக்கும் சால்வை அணிவித்தார்.