சென்னையில் குழந்தை கடத்தல்; ஸ்கெட்ச் போட்ட காவல்துறை... சினிமா பாணியில் அதிரடி மீட்பு!

“இரவு இரண்டரை மணிக்கு குழந்தை காணாமல் போன நிலையில் காலை 6 மணிக்கு குற்றவாளிகளை கைதுசெய்துவிட்டோம்” காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ்
காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ்
காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ்pt web

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒரு வயது ஆண் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தை கடத்தல் தொடர்பாக 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் குழந்தை கடத்தல் சிசிடிவி காட்சி
சென்னை சென்ட்ரல் குழந்தை கடத்தல் சிசிடிவி காட்சி

ஒடிசா மாநிலம் காந்தம்மால் மாவட்டம் பகுதியைச் சேர்ந்த நந்தினி - லங்கேஸ்வர் தம்பதி, ஒரு வயது ஆண் குழந்தையுடன் நேற்றிரவு ஒரிசாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே அந்த தம்பதி குழந்தையுடன் தூங்கி உள்ளனர்.

இந்நிலையில், நள்ளிரவில் எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனது தெரியவந்தது. ரயில் நிலையம் முழுவதும் தேடி பார்த்த நிலையில், குழந்தை கிடைக்காததால் சென்ட்ரல் ரயில் நிலைய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

நிகழ்விடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், அடையாளம் தெரியாத நபர், குழந்தையை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறுவதை அறிந்துள்ளனர். அந்த ஆட்டோவின் எண்ணை வைத்து ஆட்டோ ஓட்டுநரை கண்டுபிடித்து விசாரணை செய்ததில், அந்த நபரை குன்றத்தூர் பகுதியில் அவர் இறக்கிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை அமைத்து அப்பகுதியில் தீவிரமாக தேடிய காவல்துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் செய்தியளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இரவு இரண்டரை மணிக்கு குழந்தை காணாமல் போன நிலையில் காலை 6 மணிக்கு குற்றவாளிகளை கைதுசெய்துவிட்டோம். குற்றவாளிகளை விசாரணை செய்ததில் குழந்தை இல்லாததால் வளர்ப்பதற்கான ஆசையில் தூக்கிச்சென்றதாக சொன்னார்கள்” என்றார். சினிமா பாணியில் விரைந்து காவல்துறையினர் குழந்தையை மீட்டதற்கு, அப்பகுதி மக்களும் பெற்றோரும் அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com