”1000 மரங்கள் நட்டால் இறுதிசடங்கில் அரசு மரியாதை..” - மரங்கள் மாநாட்டில் சீமான்
சென்னை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் மரங்களை பேணிக்காப்பதற்கான முக்கியத்துவத்தை சீமான் எடுத்துரைத்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக யாரும் கவனிக்காத விசயங்கள் சார்ந்த மாநாடுகளையும், அதற்கான அவசியத்தையும் நாம் தமிழர் கட்சியும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரையில் ஆடு, மாடுகளின் மாநாடு ஒன்றை நடத்திய சீமான், தற்போது சென்னைக்கு அருகில் மரங்களின் மாநாடு என்ற பெயரில் புதிய மாநாட்டை நடத்தினார்.
இயற்கையை நேசிக்கும் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பூவுலகின் நண்பர்கள் போன்ற பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்ட இம்மாநாட்டில் பேசிய சீமான், இது வெறும் மர மாநாடு அல்ல, உயிர்காற்றை தரும் நம் தாய்க்கு நன்றி செலுத்தும் மாநாடு என்று தெரிவித்தார்.
பூமி பேரழிவை சந்திக்கும்.. எச்சரித்த சீமான்!
மாநாட்டில் பேசிய சீமான், “மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாறி வருகிறது. இனி இந்த மண்ணில் பருவமழை, பெருமழை இல்லை. புயல் மழை மட்டும்தான். புவி வெப்பமாவதுதான் இதற்கு காரணம். பூமியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, ஒருகட்டத்தில் அதை தாங்க முடியாமல் கடல் பொங்கி கொந்தளிக்கும். அந்த கொந்தளிப்பில் கடலோர கிராமங்கள் விழுங்கப்படும். ஒரு சுனாமியையே நம்மால் கடந்த காலத்தில் தாங்க முடியவில்லை. இதேநிலை தொடர்ந்தால், பூமி பேரழிவை சந்திக்கும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் டெல்லியை போன்ற நிலைமையை தமிழகத்தில் ஏற்படுத்திவிடாதீர்கள் என்று கூறிய சீமான், “தண்ணீரை தொடர்ந்து காற்றையும்கூட இவர்கள் விற்பார்கள்... டெல்லியை போல தமிழ்நாட்டிலும் சுத்தமான காற்றை குடுவையில் விற்கும் நிலைவரும். காற்று மாசுபட்டு போனதா, இல்லை நாம் காற்றை மாசுபடுத்தி சென்றோமா என யோசித்து செயல்பட வேண்டும். வீசும் நச்சுக்காற்றை மூச்சுக்காற்றாக மாற்றும் மகத்தான பணியை மரங்கள் செய்யும்” என பேசினார்.
சீமான் சொன்ன முக்கிய அம்சங்கள்..
மரங்களின் அவசியம் குறித்து எடுத்துரைத்த சீமான், மரங்கள் வளர்ப்பதற்கான முக்கியத்துவத்தை மக்களுக்கு கொண்டு செல்ல சில அம்சங்களை வைத்திருப்பதாக தெரிவித்தார்.
அதன்படி, “நான் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு பிறந்தநாளுக்கும், ஒவ்வொரு குழந்தையும் மரம் நடவேண்டும் என சொல்வேன்.
அதுபோல், பள்ளி மாணவனொருவன் பத்து மரங்கள் நட்டால் அவனுக்கு தேர்வில் 10 மதிப்பெண்கள் வழங்குவேன். 100 மரங்கள் நட்டால் ‘சிறந்த தமிழ் தேசிய குடிமகன்’ என பாராட்டு சான்று வழங்குவேன். வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
1,000 மரம் நட்டால் அவனது இறுதி சடங்கில் அரசு மரியாதை இருக்கும். மக்கள் மரம் நடுவதற்கு ஊக்கத்தொகை வழங்குவேன்.
சொந்த வீடாகவே இருந்தாலும் அங்குள்ள மரத்தை வெட்டவேண்டுமென்றால், என்னை கேட்க வேண்டும்.
கிளையை வெட்டினால்கூட, அது சக மனிதனின் கையை வெட்டுவதற்கு சமம் என்பதால், அக்குற்றத்திற்கு 6 மாதம் சிறை தண்டனை கொடுப்பேன்” என்று கூறினார்.