மதுரை | அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாராக எம்.ஏ. பேபி தேர்வு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரை கடந்த 2ம் தேதி முதல் நடந்து வருகிறது. கடந்த 3ம் தேதி கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்ற தலைப்பில் நடந்த மாநில உரிமைக்கான பாதுகாப்பு கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா உயர்கல்வித் துறை அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர் பேசினர்.
மாநாட்டின் கடைசி நாளான இன்று கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள், பொலிட் பீரோ உறுப்பினர்கள் மற்றும் புதிய பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
இதில் கேரள முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ. பேபி, சிபிஐ(எம்) கட்சியின் அடுத்த தேசிய பொதுச் செயலாளராக அறிவிப்பை கேரள முதல்வர் அறிவித்தார். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சிபிஐ(எம்) கட்சி மாநாடு நிறைவடைய உள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், இந்தப் பதவிக்கு பேபியின் பெயரை பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே பாலகிருஷ்ணன் புதிய தலைமுறைக்கு கூறியதாவது:
"மதச்சார்பற்ற சக்திகள் எல்லாம் ஒருங்கிணைத்து பாரதிய ஜனதா கட்சியை அப்புறப்படுத்துவதற்கு தேவையான அனைத்து பணிகளையும் எதிர்காலத்தில் ஒழுங்குபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி மாற்றத்தை உருவாக்குவதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளமான கட்சியை உருவாக்குவதற்கும் இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் அரசியல் தலைமை குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நிச்சயமாக எனது பணி தீவிரமாக தொடரும் எனக் கூறிக் கொள்கிறேன" என்றார்.