திருமண மண்டபங்களை குறிவைத்து திருடும் நூதன திருடன்
திருவனந்தபுரத்தில் பெரும்பாலும் திருமண மண்டபங்களை குறிவைத்து நீண்ட நாட்களாக தண்ணீர் குழாய்களை திருடிய திருடன் பிடிபட்டார்.
கடந்த சில மாதங்களாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் முதல் பாறசாலை வரை உள்ள திருமண மண்டங்களில், தண்ணீர் குழாய்களின் நல்லிகள் மர்மமான முறையில் திருடப்பட்டன. இந்தத் திருட்டு தொடர்ச்சியாக நடைபெற்று வந்ததால், அந்தப் பகுதிகளில் இருந்த திருமண மண்டபங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. சில திருமண மண்டபங்களில் தண்ணீர் குழாய்களில் இருக்கும் நல்லிகளை கண்காணிக்கவே தனி ஆட்கள் போடும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு நல்லித் திருடனால் திருமண மண்டபங்கள் மிரண்டு போய்விட்டன. குறிப்பாக பித்தளை நல்லிகள் மட்டும் திருடப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் சுற்றுவட்டாரத்தில் இருந்த வீடுகள், பொதுக்கட்டங்கள், ஸ்டேடியங்கள் ஆகிய இடங்களிலும் தொடர்ந்து நல்லித் திருட்டு நடைபெற்று வந்துள்ளது. இதனால் மக்கள் நல்லித் திருடனை பிடிக்க வேண்டும் என்ற விழிப்புடன் இருந்துள்ளனர். இந்நிலையில் தான் பாறசாலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் சுற்றித்திரிவரை மக்கள் நோட்டமிட்டுள்ளனர். அப்போது அந்த நபர் ஒரு குழாயில் தண்ணீர் திறப்பதுபோல, நல்லியை திருட முயன்றுள்ளார். இதைக்கண்ட மக்கள் உடனே அந்தத் திருடனை விரட்டிப்பிடித்து, பாறசாலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் நாகர்கோவில் மாவட்டத்தின் கிருஷ்ணன்கோயில் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பது தெரிய வந்துள்ளது. அவர் பல இடங்களில் திருடிய தண்ணீர் குழாய் நல்லிப் பொருட்களை, குழித்துறை பகுதியில் உள்ள பழைய பொருட்கள் கடையில் சேமித்து வந்துள்ளார். மொத்தமாக சேமித்து பின்னர் எடைக்கு விற்கலாம் என்று திருடிச் சேகரித்துள்ளார். அவர் சேமித்து வைத்திருந்த 40 கிலோ நல்லியையும், காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்தத் திருடனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருவனந்தபுரம் பூஜபுரை சிறையில் அடைத்தனர்.