பாரதியார் பல்கலை.,யிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்?: கேரள மாணவி கண்ணீர் புகார்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர்களின் வலுக்கட்டாயத்தால் மாற்று சான்றிதழ் (டி சி) பெற்றதாக கேரளாவை சேர்ந்த முதுகலை மாணவி அளித்த புகார் தொடர்பாக கோவை பேரூர் துணை கண்காணிப்பாளர், புகார் தாரர் மற்றும் குற்றம்சாட்டப்பவர்கள் என இரு தரப்பிடமும் விசாரணை மேற்கொண்டார்.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் முதுகலை அறிவியல் முதலாமாண்டு உளவியல் படித்து வந்தார். ஹரிதா பல்கலைகழக பெண்கள் விடுதியில் தங்கி வந்த நிலையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி விடுதியில் இருந்த சக மாணவிக்கு இரவு நேரத்தில் உடல்நிலை மோசமானதால், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டுமென விடுதி காப்பாளர் பிரேமாவிடம் கேட்டுள்ளார். மருத்துவமனை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்க பிரேமா மறுத்ததாகவும், மருத்துவமனை சென்றுவிட்டு விடுதி திரும்புகையில் விடுதியை பூட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஹரிதா குரல் எழுப்பியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ் மற்றும் உளவியல் துறை தலைவர் வேலாயுதம் ஆகியோர் வகுப்பறையில் சக மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், வகுப்பறையில் மேஜை மீது நிற்க வைத்து தண்டித்தாகவும் குற்றஞ்சாட்டும் ஹரிதா, மாற்று சான்றிதழ் அளித்து பல்கலைகழகத்தில் இருந்து வெளியேற்றியதாகவும் தெரிவிக்கிறார். இதுதொடர்பாக உளவியல் துறை தலைவர் வேலாயுதம், விடுதி காப்பாளர் பிரேமா மற்றும் தலைமை விடுதி காப்பாளர் தர்மராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக ஆளுநர், காவல்துறை தலைவர், மனித உரிமை ஆணையம், கேரள முதலமைச்சர் ஆகியோருக்கு ஹரிதா புகார் அளித்தார்.
புகார் கடிதம் அளித்ததையடுத்து பேரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர், புகார் அளித்த மாணவி ஹரிதா மற்றும் புகாரில் குறிப்பிட்டிருந்த எதிர்த்தரப்பினரான உளவியல் துறை தலைவர் வேலாயுதம், முதன்மை காப்பாளர் தர்மராஜ், விடுதி காப்பாளர் பிரேமா, உளவியல் துறை உதவி பேராசிரியர் கிருஷ்ணன், நித்யா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். மாணவி ஹரிதா புகார் அளித்துள்ள விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ், பல்கலைகழக துணை வேந்தருக்கு லஞ்சம் பெற்று தந்த புகாரில், லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.