முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்க பகுதியாக கருதப்படும் தேக்கடி ஆனவச்சலில் தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி கேரள அரசு சார்பில் இன்று முதல் வாகன நிறுத்தம் செயல்படவுள்ளது.
தேக்கடி புலிகள் காப்பகத்திற்காக வாகன நிறுத்துமிடம் அமையவுள்ள பகுதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதி என்றும் அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதை விசாரித்த தீர்ப்பாயம், அங்கு வாகன நிறுத்தம் அமைக்கத் இடைக்கால தடை விதித்தது. அதன் பின்னர், கட்டுமானப் பொருட்களைக் கொண்டு வாகன நிறுத்தம் அமைக்கக் கூடாது என நிபந்தனையை விதித்து இடைக்கால தடையை நீக்கியது. இதைத்தொடர்ந்து மூங்கில் வேலிகள் அமைக்கப்பட்டு இன்று வாகன நிறுத்தம் தொடங்கப்படவுள்ளது. ஆனவச்சால் பகுதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியா இல்லையா என்பது குறித்து பசுமை தீர்ப்பாயம் வரும் 10ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.