"விசிகவில் இணையும் வேடன்”.. ஜூன் 14ல் காத்திருக்கும் திருப்பம்! திருமாவுடன் கைகோர்க்கிறாரா வேடன்?
மலையாள திரையுலகம் மட்டுமல்லாது, பேன் இந்தியா அளவில் பேசுபொருளாகி இருக்கும் ராப் பாடகர் வேடன், விசிக தலைவர் திருமாவளவனுடன் வீடியோ காலில் உரையாடிய காட்சி வைரலானது. சமீபத்திய இந்த உரையாடலைத் தொடர்ந்து, வேடன் விரைவில் விசிகவில் இணைய இருப்பதாக பேசப்பட்டது. இதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆம், வேடன் உடனான உரையாடலில் குடும்பம் குறித்து விசாரித்த திருமா, அடுத்த ஒரு சில நாட்களில் நடக்க இருக்கும் பேரணிக்கு முடிந்தால் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.
ஜூன் 14ம் தேதி விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் மதச்சார்பின்மை காப்போம்.. என்ற தலைப்பில் திருச்சியில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், நாங்கள் 35 ஆண்டுகளாக பேசும் அரசியலை நீங்கள் சில நிமிட பாடலில் கடத்தி விடுகிறீர்கள் என்று திருமா கூற, நீங்கள் பேசுவதால்தான் இப்படி பாடுவதற்கு எனக்கு தைரியம் கிடைக்கிறது என்று பேசினார் வேடன். அப்போது, எங்கள் பேரணிக்கு நீங்கள் வந்தால் உற்சாகமாக, எழுச்சியாக இருக்கும் என்று வேடனுக்கு அழைப்பு விடுத்தார் திருமாவளவன்.
விசிகவில் இணைகிறாரா வேடன்..
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் தந்த விசிகவைச் சேர்ந்த பாவலன், வேடன் தங்கள் பேரணிக்கு வருவதில் எங்களுக்கு விருப்பம்தான் என்று தெரிவித்துள்ளார். வேடனின் தாய் ஈழத்தமிழர் என்பதால், அவரை கட்சியில் இணைக்க முனைகிறீர்களா என்று நெறியாளர் கேள்வி எழுப்பியபோது, யாரெல்லாம் சாதிக்கு எதிராக பேசுகிறார்களோ.. சாதி அமைப்புக்கு எதிராக பாடுகிறார்களோ.. எழுதுகிறார்களோ அவர்கள் எல்லாம் விடுதலை சிறுத்தைகள்தான்.. முறைப்படி உறுப்பினர் ஆக வேண்டும் என்று அவசியம் இல்லை. மற்றபடி, அவரை அழைத்துவந்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவருக்கு ஒரு பிரச்னை வந்தபோது அவருக்கான பாதுகாப்பு அரணாக நிற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி பேரணிக்கு இன்னும் 3 நாட்களே கால அவகாசம் இருக்கும் நிலையில், அந்த நிகழ்வில் திருமாவோடு வேடன் கைகோர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஈழத்தைச் சேர்ந்த தாய்க்கும், கேரளாவைச் பூர்வீகமாக கொண்ட தந்தைக்கும் பிறந்த வேடன், அடக்குமுறைக்கு எதிரான தனது பாடல்களால் தனி கவனம் ஈர்த்திருக்கிறார். அவருக்கென தனி பட்டாளமே உருவாகியுள்ள நிலையில், அரசியலிலும் வேடன் நுழைகிறாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.