கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வந்த மருத்துவக்குழு
புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நோய்த் தொற்றுகளைத் தடுப்பதற்கான சுகாரதாரப் பணிகளை கேரளாவிலிருந்து வந்த மருத்துவக்குழு மேற்கொண்டு வருகிறது.
‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர்,தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனைத்தொடர்ந்து புயலால் பாதித்த பகுதிகளில் நோய்த் தொற்றுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான மருந்துகள் அனுப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
மேலும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மழையால் ஏற்படக்கூடிய தோல் நோய்களைத் தடுக்கவும், கொசு, பூச்சிகளிடமிருந்து தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மருத்துவக்குழுவினர் வந்துள்ளனர். மருத்துவர்கள்,செவிலியர்கள் அடங்கிய இந்தக் குழு தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். கேரள அரசு மருத்துவர்கள், செவிலியர் என 100க்கும் அதிகமானோர் தமிழகம் வந்துள்ளனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மட்டும் 15 பேர் கொண்ட குழு சுகாதாரப்பணிகளில் ஈடுபடவுள்ளது.