கட்டுப்பாட்டை இழந்த கார் - சாலையோர குழியில் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
பொள்ளாச்சி அருகே சாலையோரம் இருந்த குழியில் தேங்கியிருந்த மழை நீரில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் முவாட்டுபுழா பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் பைனான்ஸ் மற்றும் பருப்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவியின் உறவினர் திருமணத்திற்கு செல்வதற்காக பொள்ளாச்சி வழியாக தாராபுரம் ரோட்டில் கொடுமுடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை சுந்தர கவுண்டனூர் என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் கார் தண்ணீரில் மூழ்கியது. சத்தம் கேட்ட கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெகமம் போலீசார் மற்றும் பொள்ளாச்சி தீயணைப்பு துறையினர், தண்ணீரில் இருந்து காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காரை தண்ணீரிலிருந்து மீட்டனர். ஆனால், காரில் இருந்த சுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.