முல்லைப்பெரியாறு கால்வாயில் கழிவு நீர் கலப்பு: மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
முல்லைப்பெரியாறு அணையின் கால்வாயில் குமுளி நகரின் கழிவுகள், சாக்கடை கலப்பது குறித்து விளக்கம் கேட்டு கேரள உயர்நீதிமன்றம் இடுக்கி ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு மாதத்திற்குள் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரியில் இருந்து கால்வாய்கள் மூலம் தமிழகத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கால்வாய்களில் இருந்து நீர் உறிஞ்சி, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி மற்றும் சக்குபள்ளம் ஊராட்சிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குமுளி ஊராட்சியின் ரோசாப்புக்கண்டம், தேக்கடி, மன்னாக்குடி பகுதிகளின் குடியிருப்புகளின் கழிவு நீர் மட்டுமின்றி, இப்பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளின் கழிவறை கழிவுகளும், குப்பைகளும் சாக்கடையில் கலந்து, தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதிகளுக்குள் சென்று, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் கால்வாயில் கலக்கிறது. எனவே தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வன உயிரினங்களுக்கும், சுற்றுப்புறச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், கழிவு நீர் கலந்த சாக்கடை நீரை குடிநீராக பயன்படுத்துவதால், பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதாகவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும், குமுளியை சேர்ந்த சஜிமோன் சலிம் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.
வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இது குறித்து விளக்கம் அளிக்க இடுக்கி மாவட்ட ஆட்சியர், தேக்கடி பெரியார் புலிகள் காப்பக இணை இயக்குனர், குமுளி ஊராட்சி செயலர், குமுளி சுகாதாரத்துறை அலுவலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு, ஒரு மாதத்திற்குள் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.