‘136அடியை எட்டியவுடன் முல்லைப்பெரியாறு நீரை திறந்துவிடுங்கள்’ தமிழகஅரசுக்கு கேரளா கோரிக்கை
கேரளாவின் இடுக்கி மாவட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழையால் தமிழகத்தின் நீர் ஆதாரமான முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இரவு எட்டு மணி நிலவரப்படி 134.85 அடியை கடந்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,500 கன அடியாக உள்ளது.
இந்நிலையில் கேரளாவில் கன மழை பெய்து இதர அணைகள் நிரம்பி வருவதால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியானதும் அணை நீரை திறந்துவிடக்கோரி கேரள அரசு சார்பில் அரசின் தலைமைச் செயலர் விஸ்வா மேத்தா, தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஐயன் "முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அணையில் 198.4 மில்லி மீட்டரும் தேக்கடியில் 157.2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. இந்த நேரத்தில் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது. இனியும் உயரவே வாய்ப்பிருக்கிறது. எனவே அணை நீர்மட்டம் 136 அடி எட்டும்போது, அணை நீரை வைகை அணைக்கு கொண்டு சேர்க்கவும், உபரி நீரை திறந்து விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்டபட்டுள்ளது" என தெரிவித்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 1978ம் ஆண்டுக்குப்பின் 36 ஆண்டுகள் கழித்து அணை நீர்மட்டம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2014, 2015, 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது.
இதையடுத்து இந்த ஆண்டு அணை நீட்மட்டம் 133 அடியை தாண்டியிருக்கிறது.
இந்த மழை தொடர்ந்தால் இந்த ஆண்டு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து வந்த நிலையில், அணை நீர்மட்டம் 136 அடியை எட்டும் போது அணை நீரை தேனி மாவட்டம் வைகை அணைக்கு கொண்டு செல்லவும், உபரி நீரை கேரளாவிற்குள் திறந்துவிடவும் கேரள அரசு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.