தமிழ்நாட்டில் கொட்டப்படும் கழிவுகளின் நிலை என்ன? - கேரள அதிகாரி கொடுத்த விளக்கம் இதுதான்!
கேரள மாநிலத்திலிருந்து இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டும் அவலம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இது குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுகாதாரத்துறை அதிகரிகள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை கேரள அரசிடம் இன்று ஒப்படைக்க இருக்கின்றனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கேரள மாநிலத்தில் இருந்து லாரிகளில் இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகளை கொட்டும் அவலம் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து
வருகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பரில் கேரள மாநிலத்தில் இருந்து 27
லாரிகளில் மருத்துவக் கழிவுகள் உட்பட பல்வகை கழிவுகள் புளியங்குடி பகுதிக்கு எடுத்து வரப்பட்டன. 2022 நவம்பரில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் அருகே
நாராயணபுரத்தில் கேரளாவிலிருந்து எலக்ட்ரானிக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டன.
அதே மாதம், நெல்லை மாவட்டம் பணகுடி அருகே தனக்கன்குளத்தில் கேரள இறைச்சி கழிவுகள், மாட்டுக் கொழுப்புகள் அதிகளவில் கொட்டப்பட்டன. 2023 ஏப்ரலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கரும்பனூரில் ஒரு தோட்டத்தில் எலக்ட்ரானிக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி எரித்தனர்.
2023ஆம் ஆண்டு மே மாதம் ஆலங்குளம் அருகே எலக்ட்ரானிக்
கழிவுகள், மருத்துவக் கழிவுகள் எடுத்து வரப்பட்ட லாரி பிடிபட்டது. அதே ஆண்டு அக்டோபரில் கேரள மாநிலம்
கோட்டயத்தில் இருந்து லாரிகளில் எடுத்து வரப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் இறைச்சி கழிவுகளை கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஊராட்சி நிர்வாகத்தினர் பிடித்து, 25ஆயிரம்
அபராதம் விதித்தனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள கேரள மாநிலம் மருத்துவக் கழிவுகள் அபாயகரமானதாக இல்லை என்றும், மருத்துவ கழிவுகளில் சோதனைக்கு பயன்படுத்தப்படும் சேம்பிள் பொருட்களே அதிகம் உள்ளன என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ள ஆய்வு குறித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வறிக்கை கேரளா அரசிடம் இன்று சமர்ப்பிக்கப்படும்.
இருப்பினும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி கழிவுகள் அகற்றுவது குறித்து கேரள அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நெல்லை மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்ட கேரள மாநில அதிகாரி பேட்டியளித்துள்ளார்.