கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெறும்: அமைச்சர் உறுதி
கீழடியில் 4 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 3 ஆம் கட்ட ஆய்வின்போது தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டன. ஜேசிபி இயந்திரம் மூலம் குழிகளில் மண் கொட்டி மூடப்பட்டது. செப்டம்பர் 30 ஆம் தேதி முடிந்த 3 ஆம் கட்ட ஆய்வில் பொருட்கள் எதுவும் கிடைக்காததால் தொல்லியல்துறை இந்நடவடிக்கை எடுத்துள்ளது. கீழடியில் ஆய்வை தொடர வேண்டுமென அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிய நிலையில் குழிகள் மூடப்பட்டன.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், கீழடி அகழாய்வு பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும் தொடர்ந்து 4ஆம் கட்ட அகழாய்வு பணி நடக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மத்திய அரசுடன் இணைந்து அகழாய்வு செய்யும் பணி நடைபெறும் என்று கூறியுள்ள அவர் பணி முடிந்ததாக தவறான செய்தி பரப்பப்படுவதாக கூறினார்.