கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைச் சுவர்.. ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்..!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இரட்டை சுவர் உள்ளிட்ட பல்வேறு பழங்காலப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் 2018-ம் ஆண்டு வரை 4 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றது. அப்போது, சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொன்மையான மனிதர்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்களை கொண்ட அரிய வகை பொருட்களும் அவர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், மனித உடல், சுடுமண் உருவம், சுடுமண் மனித முகம், தமிழ் எழுத்து பொறித்த பானை ஓடு, சுடுமண் காதணி உள்ளிட்ட 13,638 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை கடந்த ஜூன் 13-ம் தேதி தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. 57 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 5 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வரும் இந்த அகழ்வாராய்ச்சியின் போது தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புக்கான இரட்டை சுவர்களும், நெல்மணிகள் சேமித்து வைக்கும் மண் பானைகள், உணவு சமைக்க பயன்படுத்தும் மண்பாண்ட பொருட்கள், மண் ஓடுகள் உள்ளிட்ட ஏராளமான தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
கண்டறியப்பட்ட இரட்டை சுவர்களில் மூன்று அடி நீளம், ஒரு அடி அகலம் 10 செ.மீ உயரம் கொண்ட செங்கற்கள் இருந்தன. இருப்பினும் இந்த சுவர், கட்டிடத்தின் மேற்பகுதியா அல்லது என்பதை தற்போது கண்டறிய முயவில்லை என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வெளியூர்களிலிருந்து வந்த பொதுமக்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.