வரலாற்றை மாற்றி அமைக்கும் கீழடி நாகரிகம் ?

வரலாற்றை மாற்றி அமைக்கும் கீழடி நாகரிகம் ?

வரலாற்றை மாற்றி அமைக்கும் கீழடி நாகரிகம் ?
Published on

வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மூலம், சங்க கால நாகரிகத்திற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளிலேயே மிகப்பெரியது கீழடி அகழாய்வுதான். சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளன. இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்கள் உலகப் புகழ்பெற்ற அறிவியல் கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

கார்பன் டேட்டிங் எனப்படும் கரிம பகுப்பாய்வுகள், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பீட்டா சோதனை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறையில், பானை ஓடுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. புனேவிலுள்ள முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான டெக்கான் கல்லூரியில் எலும்புத் துண்டுகள் பகுப்பாய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

செங்கல் கட்டுமானத்தில் வீடுகள், தொழில் கூடங்கள், வணிகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் நகர நாகரிகம் கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு வெளிகொணரப்பட்ட மட்கலன்கள் மூலம், வட இந்தியாவின் கங்கை சமவெளி பகுதியில் நகரமயமாதலும் வைகைக் கரையின் நகரமயமாதலும் ஒரே காலக்கட்டம் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. அதாவது கி.மு. ஆறாம் நூற்றாண்டு.

கரிம பகுப்பாய்வு முறைப்படி, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ் பிராமி எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அகழாய்வு இடத்தில் உள்ள எலும்புத் துண்டுகள் மூலம், திமிலுள்ள காளை, பசு, எருமை, ஆடு ஆகியவை வேளாண்மைக்கு உறுதுணை செய்யும் வகையில் கால்நடைகளாக வளர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது. சன்னமான களிமண், செங்கல், சுண்ணாம்பு சாந்து, இரும்பு ஆணிகள் பயன்படுத்தி கட்டுமானத் தொழில்நுட்பத்தில் வீடுகள் கட்டப்பட்டிருந்தது அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கி.மு. 6ஆம் நூற்றாண்டில் சங்க காலச் சமூகம் எழுத்தறிவு பெற்று இருந்ததற்கான சான்றுகளாக ஆதன், குவிரன் போன்ற ஆட்பெயர்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கருப்பு சிவப்பு நிறப் பானை, மண் பானை, நூல் நூற்கும் தக்களிகள், கூர்முனைக் கொண்ட எலும்பு கருவிகள், தங்க அணிகலன்கள், மணிகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன. அரவைக் கல், மண் குடுவை, தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, சதுரங்கக்காய்கள் பகடைக்காய், சூதுபவள மணிகள், ரெளலட்டட் சாயல் கொண்ட பானை ஓடுகள், சுடுமண் வார்ப்பு, மனித உடல் பாகம், காளையின் தலை, மனித தலை உருவம் போன்றவைகளும் கண்டறியப்பட்டுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com