கீழடி அகழாய்வுத் தலைவராக இருந்த அமர்நாத் அசாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் ஆய்வுப்பணிகளில் தொய்வு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மதுரையை அடுத்த கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஆய்வில் தமிழர்களின் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று உண்மைகள் வெளிவந்துள்ளன. இங்கு நடைபெற்ற அகழாய்வு ஆராய்ச்சியில் 5 ஆயிரத்து 300 பழங்கால பொருட்களும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில், மூன்றாம் கட்ட ஆய்விற்கு மத்திய அரசு அனுமதியும், நிதியும் ஒதுக்கவில்லை என பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இதுதொடர்பாக விளக்கமளித்த மத்திய அரசு, உடனடியாக மூன்றாம் கட்ட ஆய்வினை தொடங்குமாறு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. ஆனால் உடனடியாக நிதி ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அப்போது எழுந்தது.
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த கீழடி அகழாய்வு பிரிவுத்தலைவர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஸ்ரீராம் என்ற அதிகாரி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அகழாய்வு ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்டிய அமர்நாத் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அகழாய்வு பணிகளில் தொய்வு ஏற்பட்டுவிட வாய்ப்புள்ளது என தமிழ் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

